May 20, 2016 தண்டோரா குழு
அரசியல் கட்சிகளால் பெரிதும் விமரிசிக்கப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஃவரூக் அப்துல் பன்னாவை 14 வருடம் கழித்து பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினர் புதன்கிழமை மும்பையில் கைது செய்தனர்.
குஜராத் முன்னாள் முதல் அமைச்சரும், இன்றைய பிரதம மந்திரியுமான மோடியின் பெயருக்குக் களங்கம் கற்பித்த நிகழ்ச்சி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம்.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ்ன் S6 பெட்டியை கோத்ரா ரயில் நிலையம் அருகே ஒரு கும்பல் தீவைத்து எரித்தது. அதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் இந்த பன்னாதான்.
அந்த ரயிலில் S6 கோச்சில் இருந்தது 59 ஹிந்து கர சேவகர்கள் ஆவர். சர்ச்சைக்குரிய பாபர் மசூதி தலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு அயோத்தியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர் அப்போது ஒரு மர்ம கும்பல் அந்தக் கோச்சுக்கு தீவைத்ததால் அதில் இருந்த அனைவரும் எரிந்து சாம்பலாயினர்.
இந்தச் சம்பவம் நடக்கையில் பன்னா கோத்ராவில் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்தார் கோத்ரா ரயில் நிலையித்தின் அருகில் போலன் பஸாரிலுள்ள அமன் கெஸ்ட் ஹவுஸ்ல் பிப்ரவரி 26ம் தேதி கூடி 27ம் தேதி ரயில் எரிப்பு பற்றி விவாதித்துள்ளனர்.
பன்னாவுடன் மேலும் மூவர் அன்று அந்த விவாதத்தில் பங்கேற்றனர். ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்கும் சலீம் பான்வாலா மற்றொருவர் அந்த வீட்டின் சொந்தக்காரர். மூன்றாமவர் மற்றொரு மாநகராட்சித் தொழிலாளியான பிலால் ஹாஜி.
திட்டமிட்டபடி ரயில்ப் பெட்டியை எரித்து முடித்தவுடன் பன்னா கோத்ராவை விட்டுத் தலைமறைவாகினார். பின்பு பல இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மசூதிகளில் 14 வருடங்கள் காலத்தை ஓட்டியதோடு, பாகிஸ்தானுக்கும் சென்றுள்ளார்.
ஆனால் கடந்த 10 வருடங்களாக மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்துள்ளார். குடிசைவாழ் மக்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் அரசு ஆவணங்கள் எழுதுவதற்கு உதவி செய்வதன் மூலம் தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
அதே சமயம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3 முறை பஞ்சமால் நகரத்தின் பல பகுதிகளுக்குத் தன் குடும்பத்தை வரவழைத்துச் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு, பன்சமகால் அருகில் கலோல் காட்கி என்ற சுங்க மையத்தின் அருகில் பன்னா தன் குடும்பத்துடன் இருக்கையில் கைது செய்தது.
இந்தக் கைதின் மூலம் மீண்டும் இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.