October 9, 2017 தண்டோரா குழு
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி விரைவு ரயிலுக்கு கோத்ரா ரயில் நிலையத்தில் வைத்து மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. குற்றவாளிகளில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இதற்கிடையில், குற்றவாளிகள் சார்பிலும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.