December 16, 2021 தண்டோரா குழு
கோழிகள் அசாதாரணமாக இறந்தால் கால்நடை மருத்துவர்களிடம் தகவல் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
ஒமிக்ரான் மற்றும் பறவைக்காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான கோவை மாவட்டத்தின் ஆணைகட்டி, வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செமனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை ஆகிய துறைகள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களை கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு கால்நடைகள், கால்நடை தீவனங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1203 கோழிப்பண்ணைகள் உள்ளன. கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளில் அசாதாரண இறப்பு அல்லது பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை அணுகி தகவல் அளிக்க வேண்டும்.
பறவைக்காய்ச்சல் நோயினை தீவரமாக கண்காணிக்க ஒருங்கிணைப்புகுழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.