July 8, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் , பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இதில், ஓய்வூதிய திட்டம், விபத்து நிவாரணம், இலவச பட்டா, தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்டங்கள் ரூ.2 கோடியே 55 லட்சத்து 14 ஆயிரத்து 430 மதிப்பீட்டில், 256 பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இக்கூட்டத்தில் அதிகாரிகள் மிகுந்த அக்கறையுடன் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களது கருத்துகள் தொடர்பாக முதல்வரிடம் நேரடியாக இது பற்றி கடிதம் கொடுத்து, அதிகாரிகளின் கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்து சரி செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்.
முதல்வர் பல இடங்களில் ஆய்வுக்காக சென்றுள்ளார். அதேபோல கோவை மாவட்டத்திற்கும் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதற்கான தேதி அவர்கள் அறிவிப்பார்கள். ஆய்வுக்கு வருகின்ற போது எந்தெந்த பணிகள் முடிக்க வேண்டும், புதிய பணிகள் என்னென்ன தேவை என்பதையும் அவரிடத்தில் நாம் கேட்கலாம் என்பதற்காக இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
வால்பாறையில், மழை அதிகமாக பெய்தது. முதல்வர் அங்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சொன்னார். முதல்வரின் அறிவுறுதல்படி வால்பாறை சென்றோம். மிக அருமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளார்கள். தண்ணீர் அதிகம் வந்தாலும் கூட, ஆபத்து இல்லாத சூழ்நிலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது. முதல்வருக்கு அது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவைக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடி முதல்வர் வழங்கி உள்ளார். வீட்டு வசதி வாரியத்தில் பத்திரம் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்காமல் இருந்தால் தாமதம் ஆனது. அவர்கள் பணம் கட்டினால் உடனடியாக பத்திரம் கொடுக்கப்படும். அதற்கான முகாம்களும் நடத்தப்படுகின்றது.
செல்வபுரம் பகுதியில் வீடு மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு அலுவலர்கள் இல்லாமல் வேறு நபர் வாடகைக்கு உள்ளார்களா? என கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும். தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் தவறு இருக்கலாம், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 500 கடைகள் மூடுகிற போது கூட பக்கத்தில் வேறு கடை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் மூடினார்கள். டாஸ்மாக் பார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும், நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.