May 3, 2023 தண்டோரா குழு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரக் கிளையின் கீழ் இயங்கி வரும் இலவச நடமாடும் மருத்துவ சேவை திட்டம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நகரின் போக்குவரத்து வசதியற்ற புறநகர கிராமப் பகுதிகளில், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று முதியோர்கள், பெண்கள் & குழந்தைகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையுடன் மருந்துகளை வழங்கியும் சேவையாற்றி வருகிறது.
இந்த நடமாடும் மருத்துவ ஊர்தி திட்டத்தின் துவக்க விழா – கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியிலுள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த சேவையினை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு கோவை பெருநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் நிகழ்வை ஒருங்கிணைத்தார். கோவை தெற்கு கிளையின் செயலாளர் முஹம்மது ஹக்கீம், முஹம்மது பஷீர், பஷீர், அபுதாஹிர் மற்றும் அப்துல் ஹாலிக் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
காலை முதலே காத்திருந்த பகுதி மக்கள் திரளானோர் தங்களுக்கான மருத்துவ சிகிச்சையினை பெற்றுச்சென்றனர்.