September 28, 2022 தண்டோரா குழு
கோவையில் மகாத்மா காந்தி நினைவகம் திறப்பு விழா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோவை குமரகுரு கல்வி குழுமங்களின் தலைவரும் மகாத்மா காந்தி நினைவகத்தின் தலைவருமான டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், ஜி.டி. குழுமங்களின் நிர்வாக இயக்குனரும் மகாத்மா காந்தி நினைவகத்தின் துணைத் தலைவருமான ஜி.டி. கோபால் மற்றும் மகாத்மா காந்தி நினைவகததின் பொருளாளருமான அகிலா ஆகியோர்இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள்,
கோவை மாநகரம் மகாத்மாவுடன் ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டிருந்தது. மகாத்மா, இப்பகுதியின் தேசிய உணர்விற்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார். மகாத்மா மூன்று முறை கோவைக்கு வந்துள்ளார் இங்கு அவருடன் தொடர்புடைய வரலாற்றுச் சின்னங்கள், என்றும் அழியாச் சுவடுகளாகவுள்ளன.
1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் போத்தனூரில் மகாத்மா தங்கிய ஜி டி நாயுடு குடும்பத்தின் எளிய ஓட்டு வீடு, இன்றும் முக்கிய வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது. இந்த இல்லம், மகாத்மாவின் நினைவையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியது.புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அக்டோபர் 02 ஆம் தேதி மகாத்மாவின் 153 வது பிறந்தநாளில் இந்நினைவகத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த எளிய தங்குமிடம் 1934 முதல் இன்று வரை பழமைமாறாமல் பாதுகாக்கப்பட்டும் மகாத்மாவின் நினைவைப் போற்றியும் காட்சியளித்துக் கொண்டுள்ளது. கோவை பகுதியில் முதல் நாள் பொதுக் கூட்டங்களில் உரையாற்றிய பின் இப்பகுதியின் முக்கிய தேசிய தலைவர்களுடனான சந்திப்பை முடித்து விட்டு அன்று இரவு ஜி டி இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்துள்ளார் மகாத்மா.
அப்போது டி.எஸ்.அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் இவ்வீட்டை ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்காக உபயோகப்படுத்தினார். ஹரிஜன மக்களின் நலன் மற்றும் விடுதலை ஆகியவற்றை கருத்தியல் ரீதியாக ஆதரித்த மகாத்மா தங்குவதற்கு இந்த எளிய இடம் ஒரு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. குறிப்பிட தக்க நிகழ்வாக மறுநாள் 1934ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி காலை ஸ்ரீ அவினாசி லிங்கம் ஐயா அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கட்டடத்திற்கு ஜி டி இல்லத்திலேயே அடிக்கல் நாட்டினார். பின்னர் அக்கல்வெட்டு நிரந்தரமாக பெரியநாயக்கன்பாளையத்தில் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நினைவகம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.
1.மகாத்மாவிற்கும் கோவைக்கும் இடையிலான வரலாற்று தொடர்பை பிரதிபலிக்கும் புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் ஓவியங்களுடன், மகாத்மா பயன்படுத்திய பொருட்களின் பிரதிகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சிப் பகுதி.
2.மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை விளங்கச் செய்து, பார்வையாளர் களுக்கு உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலுக்கு ஆதாரமாக விளங்கும் புகைப்படப் பகுதி.
3.மகாத்மாவைப் பற்றிய அரிய நூல்கள், மகாத்மாவின் சிறப்புக்குரிய கடிதங்கள் மற்றும் மகாத்மாவின் இலக்கியங்களைக் கொண்ட நூலகம்.
4.இங்கு மகாத்மாவின் தனித்துவமான ஆவணப்படங்களும் திரையிடப்படும்.
5.சத்யம், தர்மம் மற்றும் அகிம்சை ஆகிய அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க ஒரு உரையாடல் கூடம்.
இந்நினைவகம் ஒரு நினைவுச்சின்னமாக மட்டுமல்லாமல் ஒரு கற்றல் மையமாகவும் செயல்படும். ஆண்டு முழுவதும் பொதுமக்கள், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த நினைவிடத்திற்கு வருகை தருவார்கள். மாதாந்திர விரிவுரைகள் தவிர பயிற்சித் திட்டங்கள் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு வளாகம் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.