May 4, 2023 தண்டோரா குழு
கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. குறிப்பாக வனப்பகுதிகள், மலை அடிவார பகுதிகள் போன்ற இடங்களில் மாலை நேரங்களில் அதிக அளவு மழை பெய்து வந்தது.
இந்நிலையில் கோவை சுந்தராபுரம் அருகே உள்ள குறிச்சி பகுதியில் உள்ள சக்தி நகரில் மிகவும் அரிதான வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் அருகே இன்று காணப்பட்டது.நேற்று பெய்த மழை காரணமாக அருகில் உள்ள மதுக்கரை வனச்சரகம் அல்லது வேறு எங்கிருந்தோ அந்த பாம்பு தண்ணீரில் அடித்து வரப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
இதுகுறித்து பாம்பை மீட்ட வன ஆர்வலர்கள் கூறுகையில்,
‘‘ வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிக்கிறது. இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது,’’ என்றனர்.