April 20, 2022
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த வணக்கம் தோழர்களே அமைப்பின் இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து,உணர்வுப்பூர்வமான சமுதாயப் பணியை செய்து வருகின்றனர். கோவை போத்தனூர் பகுதியில் உள்ள பேமிலி ஃபார் சில்ட்ரன் எனும் ஆதரவற்றோர் இல்லத்தில் முடங்கிக் கிடந்த குழந்தைகளை,போத்தனூரில் உள்ள அரசன் மல்டிப்ளக்ஸ் தியேட்டருக்கு அழைத்துச் சென்று,அங்கே விஜய் நடிப்பில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து,வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவன தலைவர் நவீன் ரோஷன் கூறுகையில்,
நானும் எனது நண்பர்கள் இந்த அமைப்பின் வாயிலாக சேர்ந்து, சாதாரணமாக சில உதவிகளை பிறருக்குச் செய்யத் துவங்கியதாகவும் தற்போது, வணக்கம் தோழர்களே அமைப்பின் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளை செய்து வருவதாக கூறிய அவர்,அந்த வகையில்,ஆதரவற்ற குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து அந்தக் குழந்தைகளிடம், அவர்களின் ஆசையைக் கேட்டதில்,. எல்லோரும் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க விரும்பியதால், எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்களுடன் இணைந்து இவ்வாறு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.
குறிப்பாக, பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது 100 அடி உயரத்திற்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை, விட இம்மாதிரி வெளியே செல்ல வாய்ப்பு இல்லாமல், திரையரங்கில் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளை படத்திற்கு அழைத்து வருவதை நடிகர் விஜய் விரும்புவார். இதேபோல் மீண்டும் அடுத்தப் படத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார்.இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.