November 26, 2022 தண்டோரா குழு
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 6 வது தேசிய உயர் கல்வி மாநாடு தனியார் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. எதிர்காலத்திற்கான வேலைகளுக்கு உயர் கல்வியை மறு ஆய்வு செய்தல் என்ற கருவின் கீழ் இந்த மாநாட்டில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தொழில் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் நிபுணர்கள் கோவை மாநகரத்தில் உள்ள கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இரு தரப்பிலிருந்தும் எதிர்கால கல்விக்கு தேவையான அம்சங்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டலத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார்.இந்த மாநாட்டின் தலைவர் மற்றும் ஜி ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான நந்தினி ரங்கசாமி இந்த மாநாட்டில் பேசுகையில், வேகமாக மாறிவரும் உலகத்தில் நம்முடைய மாணவர்கள் சிறக்க வேண்டும் என்றால் அதற்கு கல்லூரிகள் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும்.எதிர்கால வேலைகளுக்கு நம்முடைய மாணவர்கள் தகுதியானவர்களாக இருக்க கற்பிக்கும் பாடங்கள்,கற்பிக்கும் விதம் எதிர்காலத்தை மனதில் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி பேசுகையில்,
கல்வி என்பது வெறும் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை கற்றுக் கொடுப்பதாக மட்டும் இல்லாமல் வெவ்வேறு துறை சார்ந்த பாடங்களில் உள்ள சிறப்பம்சங்களையும் அத்துடன் உயர்ந்த நற்பண்புகளையும் இன்றைய கால மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். பல திறன்களை மாணவர்கள் பெற கல்வி நிறுவனங்கள் தங்கள் பாட த்திட்டங்களை அதற்கேற்ப அமைக்க வேண்டும் எனவும், வகுப்பறைகள் என்பது ஆசிரியர் மட்டும் பேசும் இடமாக இ ல்லாமல் , மாணவர்கள் விவாதிக்கும் தளமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ் நாடு சபை துணை தலைவர் சங்கர் வானவராயர் பேசுகையில்,
இந்தியா ஸ்கில்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் பேசுகையில் , இந்தியாவில் கல்லூரி படித்து வெளிவரும் 52 % பட்டதாரிகள் பணியமர்த்தபட முடியாத நிலையில் உள்ளனர். எனவே நம்முடைய பாடத்திட்டம் , கல்லூரியின் கலாச்சாரம் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
துவக்க உரை வழங்கிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியின் தலைவர் கலா விஜயகுமார் பேசுகையில்,
தொழில் துறை என்பது அதன் முதல் அத்தியாயத்தில் நீராவி மூலம் இயங்கும் சக்தியை கொண்டிருந்தது. அதன் பின் இரண்டாம் அத்தியாயத்தில் மின்சாரம் , மூன்றாம் அத்தியாயத்தில் மின்னணு சாதனம் மற்றும் இணையதளம் , தற்போது நான்காம் அத்தியாயத்தில் இணையதள சக்தியால் இயங்கும் சாதனங்கள் என மாறியுள்ளது. அதற்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு. இந்தியாவில் கல்வி இன்னும் இரண்டாம் அத்தியாயத்தில் தான் உள்ளது. இதில் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாணவன் எவ்வளவு கற்றுக் கொள்கிறான் என்று நாம் பார்க்க வேண்டும்.
தொழில்துறையில் 4.0 அத்தியாயத்தில் இந்தியா சிறக்க மாணவர்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் நிலையிலிருந்து , புதிது புதிதாக சிந்திப்பவர்களாக உருவாக்கிட வேண்டும் , அந்த சிந்தனை செயலாக மாற ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக செயல்பட வேண்டும். மாணவர்களை மையமாக வைத்து எதிர்காலத்தில் வரப்போகும் மாற்றங்களுக்கு ஏதுவாக அவர்களை தயார் செய்ய வேண்டும். தரமான உயர்கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கும்படி இருக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குநர்கள் , பேராசிரியர்கள் நூற்றுகணக்கானோர் கலந்துகொண்டனர் .