March 8, 2022 தண்டோரா குழு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் தனியார் விடுதி சார்பில் நடத்தப்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அலங்கார அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வரும் நிலையில் பெண்கள் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பங்கேற்ற அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வண்ண வண்ண உடை அணிந்த இளம் பெண்கள் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.கவர்ச்சி உடையிலும் பாரம்பரிய உடையிலும் தோன்றிய இளம் பெண்களின் அணிவகுப்பு அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதேபோல் இளம் பெண்களுக்கு நிகராக சிறுமிகளும் ஒய்யாரமாக நடந்து தங்களின் மழலை கலந்த செய்கையால் பார்வையாளர்களின் கைதட்டல்களை பெற்றனர். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் மாடல் அழகிகள் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.
பெண்கள் அச்சமின்றி சமூகத்தில் செயலாற்ற வேண்டும் என்றும் மனதில் உள்ள தயக்கம் என்பதை அவர்கள் போக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.