October 25, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் இருந்து தினமும் 800 முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகாரம் ஆகிறது. இந்த குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பை தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியது.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4ம் முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது 25ம் தேதி முதல் மீண்டும் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறிதாவது:
கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.
இந்த போராட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி,கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.இதனால் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார். பேரூராட்சி, நகராட்சிகளில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதுவரை தூய்மை பணியாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.