September 23, 2022
தண்டோரா குழு
கோவையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த முதியவரை ரயில் நிலைய போலீசார் காப்பாற்றியுள்ளனர்.
கோவை மத்திய ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மூன்றில் கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வந்தது. ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் நிற்பதற்காக மெதுவாக சென்றுகொண்டிருந்தது.அப்போது முதியவர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார்.
எதிர்பாராத விதமாக அவர் தடுமாறி விழுந்த அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரமேஷ் , அருண்ஜித், மினி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அந்த முதியவரை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து விசாரித்த போது அவர் சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். காவலர்கள் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து முதியவரை காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.