March 25, 2023 தண்டோரா குழு
கோவையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். 2022-23 தார்சாலை பணிகள், சீர்மிகு நகர திட்டம், பொது நிதிப்பணிகள் என கோவை சிங்காநல்லூர், தெற்கு,வடக்கு,தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 32.78 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை துவக்கி வைக்கப்படுகிறது.
அதன்படி கோவை தெற்கு தொகுதி கெம்பட்டி காலனி பகுதியில் தார் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்படுவதாகவும் குறிப்பாக சாலைப்பணிகளுக்கான ஒப்புதல் முதல்வர் மூலம் பெறப்பட்டு டெண்டர் முடிக்கப்பட்டு பணிகள் துவக்கப்படுவதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் புதுபிக்கப்படாத தார் சாலைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்பட்டு எனவும், அதனடிப்படையில் சாலைப்பணிகள் மட்டும் ஏறத்தாழ 70% சாலைபணிகள் நிறைவு பெற்றுள்ளது என்வும் கூறினார். தற்போது புதிய சாலை பணிகளும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த குறுகிய காலத்தில் 121 கிமீ க்கு 223 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என கூறிய அமைச்சர் இது கோவை மாநகராட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும் என தெரிவித்தார். இடையர்ப்பாளையம்- தடாகம் சாலைப்பணிகள் பாதி முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க கூறப்பட்டுள்ளது எனவே கூடிய விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார். மெட்ரோ பணிகள் DPR இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும் என்றார்.
இது இல்லாத வளர்ச்சி திட்டங்கள் முதலமைச்சரால் கோவைக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் மீது அக்க்றை கொண்டு இவற்றை வழங்கி வருகிறார். மேலும் செம்மொழி பூங்கா அறிவிப்பு, எழில்மிகு கோவை என்பவை மிக சிறப்பான ஒரு திட்டம் என தெரிவித்தார். கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய சாலைகள் தான் பழுதடைந்து உள்ளது, சாலைப்பணிகளுக்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அதே போல பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் புதுபிக்கபடாமல் இருந்தது என கூறிய அவர் இதனையெல்லம் கவனத்தில் கொண்டுதான் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.
வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் குறித்த கேள்விக்கு, 30 நிமிட செய்தியை 3 நிமிடத்தித்கு கேட்கிறீர்கள் என பதிலளித்த அவர் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுடன் சேர்த்து அப்பணிகளும் செய்யபட வேண்டி உள்ளது என பதிலளித்தார்.இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.