November 18, 2017 தண்டோரா குழு
கோவையில் கவர்னர் ஆய்வு செய்தார் என்பதே தவறு என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரி ஏய்ப்பு புகாரின் பேரில் தான் சசிகலா குடும்பத்தினர் தொடர்புள்ள இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். போயஸ் தோட்ட இல்லத்தில் யாரால் வருமான வரிசோதனை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா இருந்தபோது இந்த சோதனை நடைபெற வில்லை. சிலர் செய்த தவறுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் 10 ஆண்டுகளாகவே அதிமுகவில் இல்லை. எனவே கட்சியுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில், தினகரன் தன்னைத் தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார் எனக் கூறினார்.
மேலும்,கோவையில் கவர்னர் ஆய்வு செய்தார் என்பதே தவறு.கவர்னரின் ஆய்வு திட்டமிடப்பட்டது இல்லை. திட்டங்களை தெரிந்து கொள்வதற்காகவே அதிகாரிகளை சந்தித்துள்ளார். கவர்னர் ஆய்வு குறித்து எதிர்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றன. மாநில அரசு சிறப்பாக செயல்படுவதாக கவர்னர் பாராட்டி பேசி உள்ளார்.போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இருந்த இடத்தில் சோதனை நடத்தப்படவில்லை. கோயிலாக கருதும் ஜெ., இல்லத்தை நாங்கள் அரசு நினைவிடமாக்க முடிவு செய்துள்ளோம்