December 4, 2021 தண்டோரா குழு
கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (30). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலைபார்த்து வந்தார். அங்கு அவர் வேலை செய்தபோது காஞ்சிபுரம் மாவட்டம், மீனம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஜெயந்தி, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்.இந்நிலையில் ராகேஷ் கடந்த ஜூலை மாதம் சொந்த ஊர் திரும்பினார். இதேபோல ஜெயந்தியும் காஞ்சிபுரம் திரும்பினார். இதற்கிடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராகேசுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்த விவரங்களை ஜெயந்திக்கு ராகேஷ் வாட்ஸ்அப்பில் அனுப்பி, இதுகுறித்த விவரங்களை தெரிவிப்பதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வர சொன்னார்.
இதைத்தொடர்ந்து ஜெயந்தியும் காஞ்சிபுரத்தில் இருந்து கோவை வந்துள்ளார்.
அப்போது என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு வேறொரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என ஜெயந்தி, ராகேசிடம் கேட்டு தகராறு செய்ததுடன், தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயந்தி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயந்தியின் செல்போனை ராகேஷ் பறித்துக்கொண்டு, அதில் உள்ள சில போட்டோக்கள் மற்றும் தகவல்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ஜெயந்தி, தூக்க மாத்திரை தின்று, கைப்பையில் வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டு, ஆசிட் பாட்டிலை எடுத்து ராகேஷ் மீது வீசி உள்ளார். இதில் ராகேஷின் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராகேஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவத்தின்போது தூக்க மாத்திரை சாப்பிட்டத்தில் மயங்கி விழுந்த ஜெயந்தியை அங்கிருந்த காவலாளி மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து ஜெயந்தி அளித்துள்ள புகாரில், ராகேஷ் தன்னிடம் ரூ.18 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகேஷ், ஜெயந்தி தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.