April 1, 2023 தண்டோரா குழு
கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் நலனுக்காக ஒரு நாள் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாநகர போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வாகனங்களில் ‘மினி’ நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ஒரு நாள் யோகா பயிற்சி நடத்தப்பட்டது.கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தனியார் மருத்துவமனை சார்பில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் போலீசாருக்கு மூச்சுப்பயிற்சி, எளிதில் செய்யக்கூடிய யோகாசனங்கள், உடற்பயிற்சிகள் மற்றும் மனநலம் பேணும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் போலீசாருடன் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.