October 21, 2021 தண்டோரா குழு
கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க வீரவணக்கமும், அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பணியில் இருக்கும்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம், மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று காலை கோவை போலிஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள வீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவு தூணிற்கு மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
குறிப்பாக கடந்த ஆண்டு 01-09-2020 முதல் 31-08-2021 வரை இந்தியா முழுவதும் பணியின்போது வீரமரணம் அடைந்த 377 காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரவணக்கமும், அஞ்சலியும், செலுத்தப்பட்டது.
இதில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோதர்,கோவை சரக டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், உட்பட காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு நினைவுதூண் அருகே வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு முறைப்படி 60 குண்டுகள் முழங்க மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து 30 காவல்துறையினர் கலந்துகொண்டு இசை வாத்தியங்களை இசைத்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள்.