March 31, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி,கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில், சாக்கடை நீர் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக,கிழக்கு மண்டலம், 26ஆவது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளிங்கிரி கூறியதாவது:
கோவை மாநகராட்சி, 26ஆவது வார்டுக்கு உட்பட்ட முருகன் நகர் பகுதியில், 24 மணி நேர குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு, புதிய குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்ட சூயஸ் நிறுவன ஊழியர்கள்,சாக்கடை குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர்.இதன் காரணமாக, குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் புகுந்து, முருகன் நகர் பகுதிகளில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில்,கடந்த ஒரு வாரமாக சாக்கடை நீர் வருகிறது.
இதுதொடர்பாக,சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியும் பலனில்லை.கடந்த புதன்கிழமை இரவு குழாய்களைச் சீரமைத்து, தூய்மைப் பணி மேற்கொண்டு,வியாழக்கிழமை முதல் குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை ரூ.2 ஆயிரம் முதல் செலவு செய்து சுத்தப்படுத்திய பிறகும் சாக்கடை நீர் தான் வந்தது. இதனால், மீண்டும் செலவு செய்து, தொட்டியைச் சுத்தப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மேயர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.