August 8, 2017 தண்டோரா குழு
கோவை ரயில் நிலையத்தில் தப்பிச்செல்ல முயன்ற குற்றவாளியை காவல்துறையினர் பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு சன்மானம் வழங்கப்பட்டது.
ஜூலை மாதம் 9-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரோஜா என்பவர் பயணித்துள்ளார். கோவை ரயில் நிலையத்தில் அவரது 12 பவுன் நகை, பான்கார்டு, ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவை திருடு போய்விட்டது.
இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பார்த்ததும் ஓடியுள்ளார். செந்தில் குமார் அவரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றார் இதனை பார்த்த ரயில்நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த வாலிபரை பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்கு உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் உத்தரவின் பேரில் ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு 500 ரூபாயினை ரயில்வேத் துறை டி.எஸ்.பி குணசேகரன் இன்று வழங்கினார்.