September 21, 2022 தண்டோரா குழு
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அதன்பேரில் நேற்றைய தினம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் பாலாஜி உத்தமராமசாமி பீளமேடு காவல் நிலைய போலீசாரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தகவல் அறிந்த பாஜகவினர் 500க்கும் மேற்பட்டோர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் திரண்டனர். ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து கலையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அங்கிருந்து கலையாத பாஜகவினர் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவரை விடுதலை செய்யக்கோரி கோவை அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேரை தவிர்த்து மீதமுள்ளவரை மாலையில் போலீசார் விடுவித்தனர். இதனால் 32 பேரையும் விடுவிக்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.