September 3, 2021 தண்டோரா குழு
கோவையில் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் கோவை கிளை சார்பாக நடைபெற்ற இலவச முக கவசம் வழங்குதல்,மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் துவக்கி வைத்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தன்னார்வலர்களும் கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி கொரோனா மூன்றாவது அலையை பரவாமல் தடுக்கு தடுப்பூசி செலுத்துவது,சமூக விலகலை பின்பற்றுவது போன்ற பணிகளை தொடர்ந்து,மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் கோவை கிளை செயற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே இலவச முக கவசங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் துவக்கி வைத்தார். மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் கோவை கிளை தலைவர் இம்ரான்,துணை தலைவர் ,ஹர்பிரீத் சிங் ஆனந்த் எனும் டோனி சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு,முக கவசம் வழங்கி, சானிடைசர் மற்றும் முக கவசம் அணிவதன் அவசியம், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,
கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபட, சமுதாயத்தில் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் மேம்பாட்டு தலைவர் ஜைனப்,மாவட்ட விஜிலன்ஸ் செயலாளர் கார்த்திக்,மற்றும் சமூக மேம்பாட்டு செயலாளர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.