June 10, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா 4-வது அலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்,கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்த மூன்று மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா தொற்று இருந்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கில் இருந்து இரட்டை இலக்காக மாறியுள்ளது. கடந்த வாரங்களில் 3 முதல் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 10 பேர் வரை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால் மாவட்டத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.தற்போது, கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் 2,617 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘‘கோவை மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்றனர்.