August 7, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சுவர்களில் சங்க கால தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியிலுள்ள சுவர்களை அழகுபடுத்தும் வகையில் முதலாவதாக மத்திய மண்டல அலுவலக சுவற்றில் பண்டைய தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, மண்பாண்டங்கள் செய்தல், தமிழ் பிராமி எழுத்துக்கள், இசைக்கருவிகள், கூடை பின்னுதல் போன்ற சங்க கால தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது.
இதே போன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாநகராட்சி சுவர்களில் பல்வேறு வகையான பயனுள்ள ஓவியங்கள் மாநகராட்சியால் வரையப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.