November 2, 2022 தண்டோரா குழு
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகரில் அன்பும், இணக்கமும் மேலோங்கிடும் முயற்சிகளை மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று கோவை வருகை புரிந்துள்ளார்.அவருடன் இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது அகமது பாரூக் அகியோரும் வருகை புரிந்துள்ளனர்.
அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல IG சுதாகர் ஆகியோரை சந்தித்து அமைதி மற்றும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மாநாகர சூழல் குறித்து பேசினர்.அதைப்போல் வணிகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கூட்டமைப்பினர், ஜமாத்தினர் என பலரையும் சந்தித்து உரையாடினர்.
பல்வேறு மதத்தலைவர்களை சந்தித்து பேசி வரும் நிலையில், CSI கிருஸ்துவ தேவாலயத்திற்கு வருகை தந்து அருட்தந்தை சார்லஸை சந்தித்து உரையாடினர். அப்போது மஜக பொதுச் செயலாளர், நிமிர் பதிப்பகம் வெளியிட்ட ‘பூக்களை நசுக்கிய பூட்ஸ் கால்கள்’ என்ற நூலை அருட்தந்தை சார்லஸிடம் வழங்கினார்.
கோவையில் இந்து – முஸ்லிம் – கிரித்தவ தலைவர்களை ஒருங்கிணைத்து மத நல்லிணக்கத்தை வளர்க்கவும், மக்களை இணைக்கவும் மஜக எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தருவதாக அருட்தந்தை சார்லஸ் கூறினார்.மேலும் சமூக நல்லிணக்கத்திற்கு தாங்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்தும் ,தேவாலய நிகழ்ச்சிகள் குறித்தும் அருட்தந்தை சார்லஸ் விளக்கினார். கோவையில் பதட்டத்தை தனித்து, சகஜ நிலை முழுமையாக திரும்ப எல்லோரும் இணைவது காலத்தின் தேவை என்றும் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி குறிப்பிட்டார்.
மேலும், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகள் அவர்களை சந்தித்து பேசினார்.அவருக்கு ‘குறளும், குர்ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் ‘ என்ற நூலை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வழங்க , மிகவும் மகிழ்ச்சியடைந்த அடிகள் அவர்கள், ‘சிவஞான போதத்து திருநெறி உரை’ என்ற நூலை அவருக்கு பதிலுக்கு அளித்து அன்பை வெளிப்படுத்தினார்.
இந்து – முஸ்லிம் – கிறித்தவ தலைவர்களை இணைத்து சகோதரத்துவ பணிகளை முன்னெடுப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பொதுச் செயலாளர் கூற, அதை ஆமோதித்த அடிகள் அவர்கள் அதை முன்னெடுப்போம் என்றார். மதவெறி, பயங்கரவாதம்,வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக எல்லா சமூகத்தவர்களையும் திரட்ட வேண்டும் என இருவரும் ஒரே கருத்தை வலியுறுத்தி உரையாடினார்.
மேலும், கோவை இஸ்லாமிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இனாயத்துல்லாவை சந்தித்து உரையாடினார்கள். அப்போது,
கோவையின் எல்லா தரப்பு மக்களும் ஒற்றுமையை விரும்புவதாகவும், வன்முறை, மதவெறி, தீவிரவாதம் ஆகியவற்றை தாங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.கூட்டமைப்பின் நோக்கம் அமைதி, ஒற்றுமையை வலிமைப்படுத்துவதும், நேர்மையான விசாரிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் என அவர் குறிப்பிட்டார். இதற்கு மஜக என்றும் துணை நிற்கும் என்றும் பொதுச் செயலாளரும், இணைப் பொதுச் செயலாளரும் கூறினர்.
அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து, கோவை மாநகரில் அமைதி செழிக்க மஜக எடுத்திருக்கும் முயற்சியை சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களும் பாராட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர்TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீபா, SA.ஜாபர் சாதிக், மற்றும் மாவட்ட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.