September 15, 2022 தண்டோரா குழு
கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் 2022 செப்டம்பர் 15 முதல் 17 வரை தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் சிருஷ்டி 2022 கண்காட்சி நடக்கிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில், 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது. உலக கைவினை கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் சென்னையில் உள்ள இந்திய கைவினைபொருள் சங்கத்தின் அங்கீகாரத்துடன் இது செயல்பட்டு வருகிறது.அரிய வகை கற்கள், பனை ஓலைகள், மற்றும் கைவினை கலைஞர்களின் உலோக பொருள் விற்பனையை மேம்படுத்தி வருகிறது.
கோவையில் இந்த கவுன்சிலின் உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு நடத்தி வரும் தனித்துவமிக்க விற்பனை கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக புகழ்மிக்கதாக உள்ளது. சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள், வடிவமைப்புகள்,கைவினை பொருட்களை உருவாக்கிய கலைஞர்களே நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
ஜவுளி பொருட்கள், சேலைகள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கும் மகளிருக்கமான அழகிய ஆடைகள், அரிய வகை கற்கள், வீட்டு அலங்கார பொருட்கள், ஜவுளி பொருட்கள், வாழ்வியல் முறை பொருட்கள் இங்கு விற்பனையாகின்றன. இந்த வகையில் 58 அரங்குகளும், உணவு வகைகளுக்கு 12 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் வாயிலாக சொந்த செலவில் 25 ஆண்டுகளாக இந்த கண்காட்சியை சிருஷ்டி நடத்தி வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வில், அகில இந்திய அளவிலிருந்தும் ஜவுளி மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
கைவினை பொருட்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை ஊக்கப்படுத்தும் தளமாக மட்டுமின்றி, பெருமளவு வாடிக்கையாளர்களையும் உருவாக்கி வருகிறது.