February 10, 2023 தண்டோரா குழு
தென் பிராந்திய இந்தியன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி மற்றும் கோயம்புத்தூர் நெப்ராலஜி அசோசியேஷன் சார்பில் கோவையில் சிறுநீரக சிகிச்சை முறைகள் குறித்த நான்கு நாட்கள் தேசிய அளவிலான 42 வது அகில இந்திய மாநாடாக நடைபெறவுள்ளது.இந்த மருத்துவ மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று துவங்கியது.இந்த தேசிய மாநாடு வரும் 12ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றது.
இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி மற்றும் கோயம்புத்தூர் மாநகர காவல் துறை ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தார்கள். இந்த மாநாட்டில் 6 மாநிலங்களை சேர்ந்த சுமார் 500 சிறுநீரக மருத்துவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் சிறுநீரக துறையில் ஏற்பட்டுள்ள நவீன வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
மாநாட்டில் கௌரவ செயலாளர் மருத்துவர் பி. ரவி சங்கர் அறிக்கையை வாசித்தார். இந்தியன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜி அமைப்பின் தலைவர் டாக்டர். சஞ்சீவ் குலாத்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் சிறுநீரக மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் Dr.A. பிரபாகரன், Dr. N.செழியன், Dr.S.முருகானந்த், Dr.S.கௌதம் மற்றும் Dr. T. சரவணன் ஆகியோர் செய்து இருந்தனர்.