May 7, 2022 தண்டோரா குழு
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2ஆம் தேதி கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அதன் ஒருங்கிணைப்பு குழுவினர், இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் வருகிற ஜூன் இரண்டாம் தேதி கொண்டாடப்படுவதாகவும் அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில் கிரீன் கிளீன் என்ற அமைப்பு சார்பில் இந்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.
தங்களது அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் ஆற்றி வருவதாகவும் தற்போது சுற்றுச்சூழலை மையப்படுத்தியே இந்த இசை நிகழ்ச்சி என்பது நடத்தப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டினர்.
பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் அதிக அளவிலான மரங்களை நட்டு அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றை மையமாகக்கொண்டு இந்த இசை நிகழ்ச்சி என்பது நடைபெறும் என்றும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்பார் என்றும் கூறியதுடன், தென்னிந்திய இசை உலகில் முன்னணி பாடகர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் 15,000 முதல் 20 ஆயிரம் பேர் இசை நிகழ்ச்சியை காண வருவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் சாமான்ய மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் குறைந்த அளவிலான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும் ஏழை மக்களுக்கு இலவசமாகவும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.முன்னதாக இசை நிகழ்ச்சி குறித்த முத்திரை மற்றும் போஸ்டர் ஆகியவற்றையும் அவர்கள் வெளியிட்டனர்.