February 8, 2018 தண்டோரா குழு
கோவையில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே அழுகவிட்டு உள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 290 எக்டர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்ததால் செடிகளில் இருந்து தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டதால் தக்காளி செடியிலேயே அழுகி வீணாகி வருகிறது.
மேலும்,ஒரு கூடை தக்காளி 120 ரூபாய் முதல் 145 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் ஒரு கூடை 60 ரூபாய்க்கும் குறைவாகவே விலை போகிறது. தக்காளி பறிக்க ஆட்கள் கூலி, பறித்த தக்காளியை
மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லும் வண்டி வாடகை உள்ளிட்டவற்றுக்கு கூட போதுமான விலை கிடைக்கததால் தக்காளியை பறிக்காமல் விட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.