December 4, 2021 தண்டோரா குழு
கோவையில் பெய்த கனமழை காரணமாக அவினாசி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கார் ஒன்று மழைநீரில் சிக்கியது. இதில் காரில் இருந்த 3 பேரும் கீழே குதித்து வெளியே வந்து உயிர் தப்பினர்.
கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனிடையே கோவை மாநகர் பகுதிகளான உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம், ரயில்நிலையம், கலெக்டர் அலுவலகம் சாலை, ரத்தினபுரி, சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், உப்பிலிபாளையம், போத்தனூர், ராமநாதபுரம், சிங்காநல்லூர், அவினாசி சாலை, பீளமேடு மற்றும் ஊரக பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் வரை கனமழை பெய்தது.
இதில் கோவை அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி சாலையில் 10 அடி ஆழம் வரை மழை நீர் சூழ்ந்தது. இதில் அவ்வழியாக வந்த கார் ஒன்று சிக்கி கொண்டது. உடனடியாக காரில் இருந்த மூன்று பேரும் கீழே குதித்து உயிர் தப்பினர். கார் முழுவதும் மூழ்கியது. அதே போல் லங்கா கார்ணர் பகுதியில் 3 அடி ஆழம் வரை மழைநீருடன் சாக்கடை நீர் சூழ்ந்தது. இதில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. அதே போல் ராம்நகர் செல்லும் ரயில்வே சுரங்க பாதை முற்றிலும் மூழ்கியது. அங்கு உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பூ மார்க்கெட் முதல் சாய்பாபா காலனி வரை உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் வெள்ளம் ஆர்பரித்து சென்றது. இதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதே போல் கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகளில் குழிகள் 1 அடி ஆழம் வரை உருவாகி அதில் மழை நீர் தேங்கியது. இதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. கோவையில் பெய்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.