March 31, 2022 தண்டோரா குழு
“தி டாலர் சிட்டி” படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. இப்படத்தின் இயக்குனர் வினித் “தி டாலர் சிட்டி” படத்தின் முதல் போஸ்டரை செய்தியாளர்கள் முன் வெளியிட்டார்.
தமிழகத்தின் டாலர் சிட்டி என வர்ணிக்கப்படுவது திருப்பூர். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள பிற மாநிலத்தவர்களுக்கும் எண்ணற்ற வேலைவாய்ப்பை கொடுப்பது திருப்பூர். அதேபோல அந்நியச்செலாவணியும் அதிக அளவில் அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் செல்வம் குளிக்கும் நகரம் திருப்பூர்.
இத்தனை சிறப்புகள் கொண்ட திருப்பூரில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆதாரப்பூர்வமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த “தி டாலர் சிட்டி” என்ற படம். இத்தகவலை இயக்குனர் வினித் கோவை பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
50 லட்ச ரூபாய் செலவில் “வைஸ் வெரிட்டாஸ் ஸ்டுடியோஸ்” தயாரித்துள்ள இந்த “தி டாலர் சிட்டி” படம் 10 மொழிகளில் வெளியிடப்படுகிறது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு,ஜெர்மன் ஆகிய பத்து மொழிகளில் வெளியிடப்படுகிறது. வெள்ளித்திரையில் அல்லாமல் ஒ.டி.டி யில் இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக இயக்குனர் வினித் தெரிவித்தார்.
திருப்பூரில் தயாரிக்கப்படும் டீ-சர்ட்டை அணிவதால் கேன்சர் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை, ஆதாரப்பூர்வமாக இப்படத்தில் காட்சிபடுத்தி இருப்பதாக தெரிவித்தார் வினித். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக இப்படம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இந்த படம் வெளியானவுடன் மாபெரும் விழிப்புணர்வு தொழில் முனைவோர்கள் மற்றும் மக்களிடையே ஏற்படும் என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாலர் சிட்டி படத்தின் இசை அமைப்பாளர் தூயவன் உடனிருந்தார்.கோவையில் முதல்முறையாக படம் போஸ்டர் ரிலீஸ் செய்வதற்க்கு,தான் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தது தான் காரணம் என்றார் வினித்.இருவருக்கும் “தி டாலர் சிட்டி” தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.