April 2, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் ஸ்வேதா. 19 வயதான ஸ்வேதா 12 ஆம் வகுப்பு முடித்தவுடன், கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த 5 மாதமாக தங்கி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில்,நேற்று உடன் தங்கியிருந்த மாணவிகள் பயிற்சி முடித்து வந்து பார்த்தபோது, இரவு தனது அறையில் ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த கோவில்பாளையம் காவல்துறையினர்,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்,12 ஆம் வகுப்பு முடித்து தேர்வு மையத்தில் சேர்ந்து படித்து வந்த ஸ்வேதா நன்றாக படிக்கக்கூடியவர் என்பதால் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடத்தினர். அதில்,காதல் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. நீட் மையத்தில் உடன் படித்து வந்த மாணவனுடன் காதல் ஏற்பட்ட நிலையில்,அந்த மாணவனை அவரின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு அழைத்து சென்ற நிலையில், மாணவியின் பெற்றோரும் கண்டித்து உள்ளனர்.
இதனால், வேதனையில் இருந்த ஸ்வேதா அந்த மாணவனின் உருவத்தை வரைந்து வைப்பது, தொடர்ந்து கடிதங்கள் எழுதுவது என்று இருந்து வந்துள்ளார்.இந்நிலையில், உடல்நலம் சரியில்லை எனக்கூறி மாணவி நேற்று வகுப்புக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில்,அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.அந்த மாணவி தங்கியிருந்த அறையில் இருந்து, காதல் கடிதங்கள்,செல்போனில் இருந்தும் சில குறுஞ்செய்திகள் காதல் விவகாரம் என்பதை உறுதி செய்யும் வகையில் கைப்பற்றிய காவல்துறையினர்,தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.