December 27, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் பறவைக்காய்ச்சலின் தாக்கமோ, வீரியமோ இல்லாததால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. முட்டை, கோழி இறைச்சியை பயமின்றி உண்ணலாம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:
கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் வாத்து இனங்களில் பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக மாவட்டத்தில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவிலிருந்து கோழி, முட்டை, குஞ்சுகள், கோழிக் கழிவுகள் ஏற்றிவரும் வாகனங்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழைவதை தடைசெய்து திரும்ப அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கோழிகள், முட்டை, குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் சான்றின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகிறது. திரும்ப தமிழகம் வரும் வாகனங்கள் உரியவாறு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள், வலசைப்பாதையில் வரும் பறவைகள், நீர்நிலைகள் ஆகியவை தொடர் கண்காணிப்பில் உள்ளன. கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மாதம் தோறும் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இதுவரை நோயின் வீரியம் அறியப்படவில்லை. இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பறவைகள் ஏதேனும் நோயின் அறிகுறிகளான தலை வீக்கம், தொண்டை மற்றும் தாடி பகுதிகளில் வெளுத்தும், மூக்கில் சளியுடனும், தொடை பகுதியில் உள்ள தசைகளில் ரத்தக்கசிவோடு அதிக இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க பண்ணையாளர்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முட்டை மற்றும் கோழி கறியை சமைத்து உண்பதினால் இந்நோய் பரவும் தன்மை மிகமிக குறைவு. அதனால் முட்டை மற்றும் கோழி இறைச்சியை பயமின்றி உண்ணலாம். தற்சமயம் கோவை மாவட்டத்தில் இந்நோயின் தாக்கமோ, வீரியமோ இல்லாததால் பீதி அடையத் தேவையில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.