December 13, 2021 தண்டோரா குழு
கோவையில் பிளஸ் 1 மாணவரை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை கணபதி உதயா நகரை சேர்ந்த 16 வயது மாணவர், கோவை நகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது. இதை வாங்கி சென்ற மாணவர், அதனை வீட்டிற்கு சென்று அணிந்து பார்த்தார். அப்போது சட்டை பெரிதாக இருந்ததாக தெரிகிறது.
சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அவரது தாய் சட்டையை சரியான அளவில் தைத்து கொடுத்தார். அந்த சட்டையை அணிந்து கொண்ட பிளஸ் 1 மாணவர் காலை பள்ளிக்கு சென்றார்.
மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்த போது வகுப்புக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் ஒருவர், சீருடை குறித்து விசாரித்தார். அந்த மாணவரை எழுந்து நிற்க வைத்து, அவரிடம் கேள்வி கேட்டு தாக்கினார். பக்கத்தில் வகுப்பில் இருந்த டீச்சர் ஒருவர் வந்து தடுத்தார். அப்போதும் ஆசிரியர் மாணவரை பிரம்பினால் சரமாரியாக தாக்கினார்.
காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
பள்ளியில் மாணவரை ஆசிரியர் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய ஆசிரியரை பள்ளி நிர்வாகம் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. மேலும் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் மாணவர்களை அடிக்கவோ, மிரட்டவோ கூடாது. விதிமுறை மீறி நடக்க கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.