November 12, 2021 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், நெஞ்சில் குத்திய
கூர்மையான ஆயுதத்துடன் வந்த நோயாளியின் உயிரை மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி ஞானமுத்து கேத்திரினால் (53). இவரது இதயத்தில் கூர்மையான ஆயுதத்தினால் நெஞ்சில் ஏற்பட்ட காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் இதய பகுதியில் இருந்த கூர்மையான ஆயுதம் எடுக்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையானது டீன் நிர்மலா முன்னிலையில் நடந்தது. மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் கல்யாண சுந்தரம், இதய அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் சிவன்ராஜ், முகமத் மின்னதுல்லாஹ், இளவரசன், அரவிந்த் மற்றும் மயக்கவியல் துறை டாக்டர் சந்திரகலா, செவிலியர்கள் பொற்கொடி மற்றும் கிருத்திகா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு இந்த அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்தனர்.
இந்த அறுவை சிகிச்சையானது முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. தற்போது நோயாளி நலமாக உள்ளார்.