April 4, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகரில் உக்கடம், டவுன்ஹால், கலெக்டர் அலுவலகம் அருகில், அவினாசி சாலை, திருச்சி சாலை கணபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திடீரென இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வடிகால் அனைத்தும் நிரம்பி சாக்கடைகள் நிரம்பி மழை நீருடன் சாக்கடை கலந்து சாலையில், தெருக்களில் ஓடியது.
இதனிடையே கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தின் உள்ளே உள்ள மூங்கில் மரம் ஒன்று சாய்ந்தது. இதே போல் சாலையோரம் உள்ள மர கிளைகள் உடைந்து விழுந்தன.அவினாசி சாலையில் தேங்கிய மழை நீரால் அப்பகுதி வெள்ளம் போல் காட்சி அளித்தது. வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.திடீரென பெய்த மழையால் உருவான வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து சென்றதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர். அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஊரகப் பகுதியில் பெய்த மழை காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.அதே சமயம் மாநகர் பகுதியில் மழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது.குறிப்பாக சிங்காநல்லூர் வரதராஜபுரம், கிருஷ்ண்ணம்ம நாயக்கர் லேஅவுட் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் சாக்கடை கழிவு நீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.