June 9, 2022 தண்டோரா குழு
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியிருப்பதாவது:
கோவை மாநகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் தற்போது இரவு 10 மணி வரை பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மாநகரில் முக்கிய சாலைகளில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
இதன் காரணமாகவும், திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களும், விடுமுறை பண்டிகை நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் மாநகரில் ஏற்படுகிறது.எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவை லட்சுமி மில் சந்திப்பு, ஆம்னி பஸ் நிறுத்தம், அவினாசி ரோடு மேம்பால ரவுண்டானா, லாலி ரோடு சந்திப்பு, ஆத்துப்பாலம் சந்திப்பு, உக்கடம் 5 முக்கு சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு, ஒப்பணக்கார வீதி, கோவை ரெயில் நிலையம், காந்திபுரம் சிக்னல் ஆகிய 10 இடங்களில் போக்குவரத்து போலீசார் இரவு 11 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள்.
இதன்மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் உடனுக்குடன் சரி செய்யப்படும். கோவையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை உள்ள கால கட்டத்தில் விதிமீறல்கள் ஈடுபட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பலர் அபராத தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். எனவே அபராத தொகை வசூலிக்க சிறப்பு திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி கோவை கிழக்கு மற்றும் மேற்கு போக்குவரத்து உதவி ஆணையர் அலுவலகத்தில் தனியாக தலா 3 பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அபராதம் விதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு உடனடியாக அலுவலகத்தில் அபராத தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.இதையடுத்து கோவை மாநகரில் 5,629 போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராத வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மொத்தம் அபராத தொகை ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 200 செலுத்தினர்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களுக்கு உரிய தொகை செலுத்த வில்லை என்றால் அந்த வாகனத்தை விற்பனை செய்யவோ,ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது.இந்த அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவோ, பொது இ-சேவை மையம், கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.