March 29, 2017 தண்டோரா குழு
தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக் கூடாது எனக் கோரியும் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இளைஞர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து 3௦-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மாணவர்கள் போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் கோவை வ.உ.சி மைதானத்தில் இளைஞர்கள், மாணவர்கள் போராட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இங்கு போராட அனுமதி இல்லை எனக்கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஒன்று கூடினர். அங்கு மத்திய மாநில அரசுக்களுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதனை அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று இளைஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்ததால் 3௦-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.