September 13, 2021 தண்டோரா குழு
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை 7522 பேர் பயனடைந்துள்ளனர்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்கி வருகிறார்கள்.
மேலும் நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதுவரை 4284 பயனாளிகளும், மாநகராட்சியில் 5 நகர்புற ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் 3238 பேரும் பயனடைந்துள்ளார்கள்.