March 28, 2022 தண்டோரா குழு
கோவையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறுநீரகம் செயலிழந்த ஒருவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் 4 பேர் இச்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சுகாதார துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். சர்க்கரை,ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சையுடன் தற்போது சிறுநீரகம் பாதிப்பிற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மாவட்ட தொற்றா நோய் தடுப்பு திட்ட அலுவலர் விஜயகுமார் கூறியதாவது: சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக மாதத்திற்கு ரூ.40 முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் உதவியுடன் இலவசமாக அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை எடுத்து வரும் நிலையில் மேலும் 4 பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இலவச டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் நிதி பெறுவது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து காத்திருப்பவர்களுக்கும் விரைவில் டயாலிசிஸ் சிகிச்சை துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்