April 12, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தூர்நாற்றம் வீசுவதாகவும், ஈ தொல்லைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்படும்.
இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. இதில் 5க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
மேலும் குப்பைகிடங்கில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு வருகிறது.இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குப்பைகள் ஈரம் ஆகின்றன. அதனால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றியுள்ள போத்தனூர், அன்புநகர், செட்டிபாளையம் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், ஈ தொல்லைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.