August 8, 2017 தண்டோரா குழு
மனிதர்களுக்கு ஆதார் போல மாடுகளுக்கும் மூன்று வகையான அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்ந்து கோவையில் நடைபெற்று வருகிறது.
மனிதர்களுக்கு ஆதார் அட்டை உள்ளது போல் மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் தொடக்கமாக முதல் முறையாக கோவை மாவட்டத்தில்இ இப்பணிகள் சோதனை அடிப்படையில் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.மாடுகளுக்கும் கால்நடைகளின் விபரங்களை சேகரித்து அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், இதனை கால்நடைகளுக்கான மருத்துவ அட்டையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கால்நடை மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்ட 105 மையங்களில் இப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலப்பின மாடு, நாட்டின மாடு, எருமை ஆகியவற்றிற்கு மூன்று வண்ணங்களில் மூன்று வகையான அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த அடையாள அட்டையில் மாடுகளுக்கு 12 இலக்க எண் மற்றும் மாட்டின் இனம், வயது, உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுகின்றன.
இதுக்குறித்து கால்நடை பராமரிப்பு துறை கோவை மண்டல இணை இயக்குநர் ராமசந்திரன் கூறும்போது,
கோவை மாவட்டத்தில் ஒரு வருட காலத்திற்குள் ஒரு இலட்சம் கால்நடைகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், இத்திட்டம் விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மாடுகளை கண்காணித்தல், மருத்துவ உதவி மற்றும் ஆலோசணை வழங்குதல், மருத்துவ காப்பீட்டிற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றிக்கு உதவுமெனவும் அவர் தெரிவித்தார்.