September 25, 2023 தண்டோரா குழு
கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் (ராக்) மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் மகளிர் பிரிவான (பிக்கி புளோ) சார்பில் “பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற திட்டத்தை நாளை (26.09.2023) காலை 6.00 மணிக்கு ஸ்ரீரிபு டாமன் பெவ்லி துவக்கிவைக்கிறார்.
இது குறித்து ராக் அமைப்பின் கௌரவ செயலாளர் ரவீந்தரன் மற்றும் பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகரன் கூறியதாவது :-
இந்த செப்டம்பர் 2023 ல், பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் என்ற தலைப்பில், சுற்றுச் சூழல் சுகாதார நாளை செப்டம்பர் 26 ல் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். சமுதாய பொறுப்போடு சுற்றுச் சூழல் மற்றும் நலன் பயக்கும் 3 சிறப்பான நிகழ்வுகளை நடத்த உள்ளோம். கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்வு நடக்கிறது.
இந்த நிகழ்வில் ஸ்ரீரிபு டாமன் பெவ்லி – இந்தியாவின் உழவன், தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இவர், சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் சமுக சேவகர். டில்லியை சேர்ந்த ரிபு டாமன், குப்பை சேகரிப்பு முறையில் நிபுணத்துவம் பெற்றவர். பிளக்கிங் என்ற வார்த்தைக்கு, வேகமாக நடக்கும்போதே குப்பைகளை சேகரித்தல் என பொருள். பொதுவாக, மெல்லிய ஓட்டத்தில் குப்பைகளை சேகரிப்பது தான் இதன் பொருள். இதனால், உடற்பயிற்சியின் போது சுற்றுச் சூழலையும் சீர்படுத்த முடியும். இந்த திட்டத்தை கோவையில் உள்ள ராக் அமைப்புடன் இணைந்து செயல்படுத்துகிறது.
“பசுமையை நோக்கி செல்வோம்; தூய்மையான சுவாசம் நோக்கி ஓடுவோம், குப்பைகளை சேகரிப்போம், சுற்றுச் சூழலை மாற்றுவோம்” என்ற கருத்தோடு, இந்த திட்டம் நாளை காலை 6.00 மணிக்கு கோவை நகரில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
உக்கடம் கவல் மாவட்டம் – பி1 காவல் நிலையம் அருகே காலை 6.00 மணி, காந்திமாநகர் மெயின்ரோட்டில் 6.30 மணி, கொடிசியா நுழைவு வாயில் 7.00 மணி, சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் காலை 7.15 மணி மற்றும் ஜி.வி. ரெசிடென்சி விநாயகர் கோவில் 7.30 மணி அளவில் நடைபெறுகின்றது.
பிளக்கிங், நமது சுற்றுச் சூழல் சத்தம் மற்றும் சுகாதார இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இந்த நேர்மறையான மாற்றத்துக்கு மக்களாகிய நாம் தயாராக வேண்டும். பிளக்கர்களாக இருப்போர், தங்களை சுற்றிலும் தூய்மையாக்கி, நாட்டினை தூய்மையான நாடாக மாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய கோவை மாநகராட்சி, குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் அகற்றவும், பொதுமக்களிடையே தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பிளக்மேன் ஸ்ரீரிபு தாமன் பெவ்லி, கோவையில் உள்ள இளைஞர்களுடன் பேசுகிறார். பிட் இன்டியா முவ்மென்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக உள்ள இவர், செப்.26 ம் தேதி மாலை 6.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் சர்ச் ரோட்டில் உள்ள ஐஎம்ஏ ஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் பேசுகிறார்.
கருர், ஸ்ரீரங்கா பாலிமர்ஸ் தொழிலதிபர் திரு.கே.சங்கர், பெட் பாட்டில் மறு சுழற்சியில் முன்னணியில் உள்ளார். இந்தியாவின் நிலையான ஜவுளி மற்றும் பசுமை கள திட்டத்திலும் பங்கு வகிக்கிறார். ஐஎம்ஏ ஹாலில் நடக்கும் நிகழ்வில் இவரும் விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். சுற்றுச் சூழல், பெட் பாட்டில், பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் நிலையான சுற்றுச்சூழல் பற்றி பேசுகிறார்.ராக் அமைப்பின் தலைவர் ஆர்.ஆர். பாலசுந்தரம் இந்த விழாவில் பேசுகிறார்.
வசுதேவ குடும்பகம் என்ற உலகம் ஒரு குடும்பம் என்ற ஜி20 மாநாட்டின் உணர்வோடு, தூய்மை பணியை சிறப்பாக செய்து, தனிநபர், குடும்ப நலனில் அக்கறை செலுத்துவோம். நமது புவிக்கும், அதன் சுற்றுச் சூழலுக்கும் நிலைத்தன்மைக்கும் நமது பொறுப்புக்கான அழைப்பு இது. நம் எதிர்கால சந்ததியினருக்காக ” சுற்றுச் சூழலின் நலன் காப்போம்” என்று கூறினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிக்கி புளோ முன்னாள் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா சேடன், துணை ஒருங்கிணைப்பாளர் கல்பனா ரமேஷ் ஆகியோர் செய்து இருக்கிறார்கள்.
மேலும் நிகழ்ச்சி நடைபெறும் ஐந்து மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக – உக்கடம் : டாக்டர் . காமினி சுரேந்திரன், காந்திமாநகர் : ஆஷா சவுந்திரராஜன், கொடிசியா : ஹேமா கோனா, ஜிவி ரெசிடென்சி : ஸ்ரீஷா மோகன்தாஸ் மற்றும் சாய்பாபா காலனி : விஷாலட்சி ஆகியோர் உள்ளனர்.