September 7, 2017 தண்டோரா குழு
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வளாகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மனவிரக்தியில், அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க கோரி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு,வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ஊர்வலமாக வந்து நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கல்வியை பொது பட்டியலில் இருந்து விடுவித்து , மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறித்தப்பட்டது.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாளை இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்