October 21, 2024 தண்டோரா குழு
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் வசிக்கும் ராஜு என்பவரின் மகன் உமாசங்கர் (47),அவரது மனைவி மற்றும் மகள் கடந்த 18.10.2024 அன்று அவர்களின் வீட்டினை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்த ரூபாய் 9,00,000/- பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றதாகவும், அதன் தொடர்ச்சியாக உமாசங்கரின் வீட்டின் கீழ் வீட்டில் வசித்து வரும் சிவசங்கர் (34) என்பவரின் வீட்டின் முன் பக்க கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 35,000/- பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்ற நிலையில் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் இருவரும் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.Kகார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், இன்று (21.10.2024) தனிப்படையினர் உமாசங்கர் வீட்டின் கீழ் வசித்த உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தர வடிவேல் மகன் சிவசங்கர் (34) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
மேலும் சிவசங்கரின் மனைவி கவிதாவும் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததால், சிவசங்கர் (34) மற்றும் கவிதா (29) -ஆகிய இருவரையும் கைது செய்து, மேற்படி திருட்டு வழக்கின் சொத்தான ரூபாய் 9,00,000/- பணத்தை பறிமுதல் செய்தும் ,மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.மேலும் சிவசங்கரின் வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனது பொய் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.