April 2, 2022 தண்டோரா குழு
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில விரும்பும் மாணவர்களுக்காக கோவையில் கல்வி கண்காட்சி இன்று நடைபெற்றது.
மிஸ்பா என்ற நிறுவனத்தினர் கோவை அவினாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜண்ட் விடுதியில் இன்று ஒரு நாள் கல்வி கண்காட்சியை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்காக இந்த கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது.பல்வேறு நாடுகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.
கண்காட்சியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து மிஸ்பா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டென்னிஸ் வசந்தகுமார் கூறுகையில்,
“எங்கள் நிறுவனம் மூலமாக மாணவர்களைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பி வருகிறோம். தற்போது நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியில் லண்டன், அமெரிக்கா அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, கல்வி கற்க வெளி நாடுகளுக்கு அனுப்புவர். இதற்காக நாங்கள் எந்தவித கட்டணமும் மாணவர்களிடமிருந்து வாங்குவது கிடையாது.மேலும் பியர்சன் நிறுவனத்தின் ‘மீ-ப்ரோ’ என்ற மென்பொருள் மூலம் மாணவர்கள் சர்வதேச தரத்திலான ஆங்கிலப் பயிற்சி பெற முடியும். இதனையும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.” என்றார்.