September 16, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு இன்று நடைபெற்றது. இந்த மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றது.
அதன்படி, இன்று அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கோவை மாவட்டத்தில் 38 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் 13,849 நபர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,518 நபர்கள் தேர்வெழுதவில்லை. இத்தேர்வினை கண்கானித்திட 38 முதன்மை கண்கானிப்பாளர்களும், 38 கூடுதல் கண்கானிப்பாளர்களும், 9 பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர்களும் பணியாற்றினர்.
“இத்தேர்விற்கான ஏற்படுகள் முன்னரே அனைத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் சிறப்பாக தேர்வுகள் நடைபெற்றது” என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தேர்வு கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.