December 7, 2022 தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சூலூர், பன்னீர்மடை கிழக்கு, செல்வபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1120 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். இதனை அடுத்து பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் செல்வபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் ரூ.46.44 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், சூலூர் பகுதி –3 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.41.88 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள்,பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.5.44 கோடி செலவில் 64 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு என மொத்தம் ரூ.93.76 கோடி மதிப்பீட்டில் 1120 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும்,மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 30 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகான ஒதுக்கீட்டு ஆணைகளையும் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக்கேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.