January 31, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 150 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். இது 97.06 சதவீதம் ஆகும். 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை. இதனால் இவர்களது பணம் அரசுக்கு திரும்பிச் சென்று விட்டது.
தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. இந்த தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.