May 30, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்பொருட்காட்சியில் செய்தி – மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச் சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
மேலும் கோவை மாநகராட்சி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்களுக்கும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்கப்படவுள்ளன. அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை காட்சிப்படுத்தும் வகையிலும் சிறப்பான அரங்குகளை அமைக்க வேண்டும்.
அதே போல் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப்பொருட்களும், பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. எனவே அனைத்து தரப்பு பொது மக்களும் வருகைபுரிந்து அரசின் திட்டங்களை அறிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர்(பயிற்சி) கிருத்திகா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்அண்ணா மற்றும் அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.