August 30, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 5,13,000 பேருக்கு மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,74,000 பேருக்கு மின்னனு குடும்ப அட்டைகள் தயார் நிலையில் உள்ளது, அவர்கள் நியாவிலை கடைகளில் அட்டைகளை பெற்றிட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
“கோவை மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களில் அமைந்துள்ள 1419 நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள 9,79,324 குடும்ப அட்டைகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதார் அட்டை பெறுவதற்கு பயனாளிகளால் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களில் அடிப்படையில் மின்னனு குடும்ப அட்டை தயாரித்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அனைத்து பதிவுகளும் சரியாக இருந்து அச்சிட்டு வரப்பெற்ற 6,87,000 மின்னனு குடும்ப அட்டைகள் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு அந்தந்த நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 5,13,000 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1,74,000 மின்னனு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டி நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே பழைய குடும்ப அட்டைகள் வைத்திருந்து மின்னனு குடும்ப அட்டை பெறாமல் உள்ள பயனாளிகள் செப்டம்பர் 1௦க்குள் தங்களுக்குரிய மின்னனு குடும்ப அட்டையினை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.